Friday, January 14, 2022

தேன்

 தேன் 

--------

அவன் வேகமாக வேலை செய்துகொண்டிருந்தான் . செல் போன்  ஒலித்தது .


சொல்லுபா .

வேலையா  இறுக்கியா கனா ?


இல்லைப்பா சொல்லு . இன்னா விஷயம் ?

ஒன்னும் இல்ல கனா , கொஞ்சம் பணம் வேணும் ,அதுக்கு தான்  போன் பன்னினேன் .


பணமா?  இதே வேலையா போச்சு உனக்கு. எதுக்கு  இப்போ பணம் ? அவன் கோபத்த்தில் எரிந்து விழுந்தான் .

அர்ஜண்டா கொஞ்சம் தேவ படுது .


அதான் மாசா மாசம் அனுபுறேனே , இன்னும் எதுக்கு உனக்கு பணம் ?

போன தடவ பயிர் ஏத்துனது நஷ்டம் . அடிச்ச மழைல பயிரெல்லாம் போயிடுச்சி கனா  . போட்ட காசு எடுக்க முடியல . 


அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற ?

நீ ஒரு  **** ரூபாய்  குடுத்தியன்ன , இந்த போகம் பயிர் ஏத்திடுவேன் . 


****  ரூபாயா ??? அவன் அதிர்ந்து போனான் .

ஆமா கனா , ஏழு  ஏக்கர் பயிர் வெக்கணும்னா , **** ரூபாய்  இருந்தாதான் முடியும்.


போவ் , என்ன விளையாடறியா ? 67 வயசுல நீ இப்போ பயிர் வைக்கலேன்னு யார் அழுதா . என்னால முடியாதுப்பா .என் கிட்ட இல்ல . எங்கயாவது கடன் வாங்கிக்கோ , அப்பறம் நீயே அத தீர்த்துக்கோ .என்ன  ஆள விடு.


டேய் நான் எங்கடா பொய் கடன் வாங்குவேன் . ஏற்கனவே வாங்குன கடனயே கட்ட முடியுமா தவிக்கிறான் .யார் கிட்ட பொய் கேப்பேன் . ஒவ்வொரு நாளையும் இந்த கடன் காரங்க  மத்தியில வாழுறதே பெரிய கஷ்டமா இருக்கு. என்னால முடியலடா . 


அப்போ பயிர் வெக்காத . 


அப்படியெல்லம் விட முடியாது கனா. தயவு செஞ்சு இந்த ஒரு தடவ தாடா . என்னால சமாளிக்க்கவே முடுயலடா. துக்கம் தாளாமல் ஓவென கதறி அழுதார் .


தன் அப்பா அப்படி அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லையா அல்லது வேலை நேரத்தில் ஏற்பட்ட தடங்களை நினைத்தோ அவன் கோவத்தின் உச்சிக்கு போனேன் .


ஏன் இப்படி என்ன உயிரை வாங்குற  . என்ன நிம்மதியா விடு .


அவர் அழுகையை நிறுத்த வில்லை .


 ஒரு விரக்தியில், அவன் சிறுக சிறுக பல வருஷமா சேர்த்த கொண்டு வந்த  **** ரூபாயை ,அவர் கணக்கில் உடனே செலுத்திவிட்டு , "என்ன ஆள விடு , இனிமேல் பணம் பணமுன்னு  என்கிட்டே  வராத. ஏன் கிட்ட இருக்கிற எல்லாத்தையும் கொடுத்துட்டேன் . " என கூறி பதில் எதிர்பாராமல் போனை துண்டித்தான் .


பணம் கொடுத்த அடுத்த சில நாட்கள் அவன் மனம் சஞ்சலித்து கொண்டிருந்தது  . உணர்ச்சிவசப்பட்டு பல நாட்கள் சேர்த்த பணத்தை சில நொடியில் இழந்து விட்டோமே என வேதனையுற்றான் . தந்தை பாசத்தில் தவறு செய்துவிட்டோமோ என தன்னை தானே திட்டிகொண்டான் .


ஒரு நாள் ஏதேச்சையாக அவன் தொலைக்காட்சியில் ஒரு குறும்படம் ஓடிக்கொண்டிருந்தது.


ஒரு இருளன் கயிருடன் காட்டுக்குள் செல்கிறான் . ஒரு பெரிய மலையை பார்க்கிறான் . உச்சி மலையில்  ஒரு பெரிய தேன்கூடு . கயிறு கட்டி பெரும்பாடுபட்டு உச்சியை அடைகிறான். புகை போட்டு தேனீகைளை துரத்துகிறான் . தேனீக்கள் அவனை கொட்டி தீர்த்தன.  புகையினாலயோ அல்லது தேனீக்கள் கொட்டிய வலியினாலயோ , கண்ணில் நீர் வடிய வடிய தேனீகைளை  விரட்டி , அந்த தேன் கூடு முழுவதையும் வெட்டி எடுத்து தான்  வைத்திருந்த குடுவையில் போட்டுக்கொண்டான்  மெல்ல மலை இறங்கி வீடு நோக்கி நடந்தான். வீட்டின் அருகே இருளனின் மகன் விளையாடி கொண்டிருந்தான் . 


அய்! அப்பா! அப்பா! குழந்தை துள்ளி குதித்தது. 


"அப்பா, தேன்  கெடைச்சதாப்பா ?"


ம்ம்ம் ...கெடைச்சது கனா ...வா  வா வா , "ஆ " காமி...


தேன் கூட்டை எடுத்து  ,குழந்தையின் வாயில் தேனை பிழிந்தான் . 




அவன் இழந்த பணம் தேனாய் இனித்தது !


-அருண்குமார் 

Sunday, February 9, 2020

நயனிகா

என் மடிமீது கடவுள் போட்ட பொன்னி நெல்லு நீ !
துள்ளி துள்ளி ஓடும் எங்க வெள்ளாட்டு குட்டி நீ !
தொட்டு தொட்டு கும்பிடும் என்  தும்ப பூவு நீ !
பாசாங்கே இல்லாத பசும்பாலு நீ !
நம்ம குலம் காக்க வந்த எங்க குல சாமி நீ !
என் காலமெல்லாம் நான் வாங்கும்   மூச்சு காத்து நீ !

Sunday, April 16, 2017

நகரம்

பக்கத்துக்கு வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது....


"மண்ணை  தொடாதே  அழுக்கு " என்று வளர்க்கப்படும்  குழந்தைகள் ..
இனி பட்டாம்பூச்சியை கொசுவை போல் அடித்து கொன்றுவிடுமோ .? என அஞ்சுகிறேன்

சித்தப்பா பெரியப்பா என ஊரே சொந்தமான காலம் போய் ,
இன்று தாத்தா பாட்டியையும் அந்நியமாய்  பார்க்கிறதே!

தொலைக்காட்சி விளையாட்டில் வெற்றி கிடைக்காது குழந்தாய்!
உன் கணினி பூக்களில் வாசம் வீசாது கண்ணே !

வாணும் நிலவும் உனக்கு சுற்றுலா தளங்கள் ,
இனி வெய்யிலும் மழையும் உனக்கு வரலாற்று பாடங்கள்.


பக்கத்துக்கு வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது....மகிழ்வதா.. அழுவதா.

                                                                                                                -அருண்

Sunday, July 24, 2016

சில சிந்தனைகள் .....

யார் வாழ்க்கையும் இங்கே பாடமில்லை,
யாரையோ பார்த்து வாழ்வதற்கு விருப்பமில்லை.

கோபத்தை வெளிப்படுத்த தயங்கினால் கோழையோ?
இரக்கமனம் மனம் இருந்தால் ஏமாளியோ?
அனைவருக்கும் வளைந்துகொடுத்தால் பச்சோந்தியோ?
தெரியாது என ஒப்புக்கொண்டால் கையாலாகாதவனோ?
நட்பாக பெண்ணை பார்த்தால் ஆண்மையற்றவனோ?
புகை மது தவிர்த்தால் வாழத்தெரியாதவனோ?

கொடுமையிலும் கொடுமை கொடுமையை கொடுமை என புரிந்துகொள்ளாததுதான்.
முட்டாள் என தெரியாமல் வாழ்வதே உத்தமம்.தெரிந்துவிட்டால் வாழ்வது கடினம்.
தகுதியற்றவனுக்கு கிடைக்கும் அற்புத வாழ்வு, கடவுள் கொடுத்த மிகப்பெரும் தண்டனை.
வாழவும் தெரியவில்லை ,வேஷம் போடவும் தெரியவில்லை.மூச்சு மட்டும் விட்டுக்கொண்டிருக்கின்றேன்.

"
எப்பிறப்பில் செய்தவினை எப்பிறப்பை தந்ததோ
முப்பிறப்பில் செய்தவினை இப்பிறப்பாய்  வந்ததோ
இப்பிறப்பை ஒப்புவித்தேன் அப்பனே உன் பொறுப்பில்
இனி எப்பிறப்பும் நேராது காண்.

"

எனும் இளையராஜாவின் வெண்பா  மனதில் கெட்டியாக  ஒட்டிக்கொண்டது .

                                                                                                                         -அருண்குமார்

Monday, March 12, 2012

வாழ்க்கை

தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கும்
குழந்தையை பாருங்கள்,
'விடாமுயற்சிக்கு' விடை கிடைத்துவிடும்!


தன் தாய்பாலையே நமக்கு தாரைவார்க்கும்
கன்றுகுட்டியை பாருங்கள்,
'விட்டுக்கொடுத்தலுக்கு' விளக்கம் கிடைத்துவிடும்!

வேற்றுமை பாராமல் எல்லாபூவையும் முத்தமிடும்
வண்டை பாருங்கள்,
ஜாதிமத பேதம் பறந்தோடிவிடும்!

வரிசையாய் செல்லும் எரும்பை பாருங்கள்,
ஒழ்க்கம் வந்து உடம்போடு ஊறிவிடும்!

முள்ளை வைத்தே கூடுகட்டி
புதுமனை புகுவிழா நடத்தும் குருவியை பாருங்கள்,
தன்னம்பிக்கை வந்து தானாய் ஒட்டிக்கொள்ளும்!

இத்தனை நாள் எனோ தெரியவில்லை
இதுதான் வாழ்க்கை தத்துவம் என்று!

ஆம்,
'என்னடா வாழ்க்கை' என சலிப்பாய் பார்த்தால்,
தலைமுடி கூட பாரம்தான்!

ரசித்து பாருங்கள்,
காக்கையின் அழகும் கன்னுக்குள்ளே நிற்கும்!

Sunday, October 16, 2011

Sunday, October 2, 2011

பசி

சத்தம் கேட்டு கண்விழித்தால் துளசி. தன்னை சுற்றி ஒரே மக்கள் நடமாட்டம். பேருந்துகளும் இரு சக்கர வாகனங்களும் அவளுக்கு அருகில் பறந்து கொண்டிருந்தன. சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள். கருப்பு நிறம் அவளுக்கு கடவுள் தந்த பரிசு. காய்ந்து சென்னிரமான முடியும், கிழிந்த அழுக்கு ஆடையும், செருப்பிடமிருந்து கிடைத்த விடுதலையும், வறுமை அவளுக்கு தந்த பரிசு. துளசி வாழ்ந்து கெட்டவள்.

பசிப்பதை உணர்ந்து கொண்டாள். அவள் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. வெறும் தண்ணீர் மட்டுமே கடந்த ஆறு வேளையும் அவளது உணவாயிருந்தது. எச்சில் கூட இல்லாமல் நாக்கு வறண்டு போய் இருந்தது. இனி வெறும் தண்ணீர் பசியை போக்காது என் புரிந்துக்கொண்டாள். பசியின் சத்தம் காதடைத்தது. யாரோ சில பேர் குடலை பிடித்து இழுப்பது பொலிருந்தது அந்த பசி. தனது வலது கையை ஊன்றி எழுந்து கொள்ள முயற்சித்தாள். முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எழுந்து கொண்டாள். கையில் பணமில்லை . எதையும் வாங்கி சாப்பிட முடியாத நிலமை.

சிறிது தூரம் நடந்தாள். திடீரென ஒரு திருமண மண்டபம் அவள் கண்ணில் பட்டது. அங்கு சாப்பாடு கிடைக்கும் என்ற சந்தோஷம் அவளது காய்ந்த உதடுகளை சிரிக்க செய்தது. வேகமாய் நடந்தாள். விறு விறுவென மண்டபத்திற்குள் நுழைந்த்தாள். சட்டென்று ஒரு பெரிய கை அவளை வழிமறிதத்து. ஓரு வயதான பெண்ணின் கை அது. "யாருடி நீ! எங்கடி ஒடற.." என கனமாய் கேட்டது அவளது குரல். "சாப்பாடு..." என்று துளசி சொல்லத்துடங்கும் போதே, " சாப்பாடா? அதுக்குள்ள என்னடி உனக்கு அவசரம்.... இன்னும் முகூர்த்தமே முடியல..!.போ..போ..ஒரு ரெண்டு மணி நெரம் கழிச்சு கடைசி பந்திக்கு வா" என்றால். பசி துளசியை திரும்ப போக விடாமல் அங்கேயே நிற்க வைத்தது. போடீன்னா..என்னடி இங்கயே நிக்கிற....!... போடி வெளியே .." என அந்த பெண் துளசியை சற்று பின்னுக்கு தள்ளி நகரசெய்தாள். பசி அவமான வார்த்தைகளை துளசியின் காதுகளில் இருந்து தள்ளி வைத்தது. கடைசி பந்திக்காக இன்னும் இரண்டு மணி நேரம் அவளால் பொருத்துக்கொள்ளவோ,காத்திருக்கவோ முடியவில்லை.ப்சி அவளை வேறு இடம் பார்க்க நகர்த்தியது.

ரோடெங்கும் அலைந்து அலைந்து திரிந்தாள். எங்கும் பசியாறமுடியவில்லை. வெயில் மண்டையை சுட்டது. எதிரில் ஒரு அம்மன் கோவில் தென்பட்டது.கோவிலின் வாசலில் சற்று நேரம் அமர்ந்து கொண்டாள். பசியாற அவளுக்கு வழி தெரியவில்லை.பசியின் வேதனை ஒவ்வொரு நொடியும் அவளை சுக்குனூராக்கியது. துக்கம் தாங்கமுடியவில்லை.உலகமே அவளுக்கு இருட்டாய் தெரிந்தது.தன் நிலயை என்னி உள்ளுக்குள் எறிமலையாய் வெடித்தாள். கோவில் வாசலில் இருந்து எட்டி உள்ளே பார்த்தாள்.கடவுள் சன்னிதானம் தெரிந்தது. ஓ..வென அழதொன்றியது.கடவுளை பார்த்து கத்தினாள். "இதுக்கா என்ன படச்சே ..இதுக்கா என்ன படச்சேசேசே!!!!!!!" . என கதறி அழுதாள். அவள் அழுகையில் வலி இருந்தது ஆனால் ஓசை இல்லை. பசி அவளின் குரலின் ஓசையை பங்கு போட்டு கொண்டது. ஆழுதுகொண்டே இனி என்ன செய்வது என்று யோசித்தாள். " பிச்சை எடுக்கலாமா" என மனம் கேட்டது . " கவுரவமான குடும்பத்தில் பிறந்த பெண் ....வேண்டாம்" என புத்தி சொன்னது. புத்தியின் வார்த்தைகளை நிராகரித்துவிட்டு,மனம் சொன்ன பேச்சை கேட்டாள்.மனதை திடமாக்கி கொண்டு பிச்சை எடுக்க தயாரானாள்.

எழுந்துகொள்ள தனது வலது கையை ஊன்றி அழுத்தினாள். சட்டென்று ஊன்றும் அழுத்தத்தை குறைத்தாள். கையின் அடியில் ஏதோ உறுத்தியது. ஊன்றிய இடத்திலிருந்து கையை எடுத்து விட்டு அந்த இடத்தை சற்று உற்று பார்த்தாள். லேசாக அந்த மண்ணை தடவி பார்த்தாள். இப்போது அவள் கண்களில் பிரகாசம். ஓரு ஐந்து ரூபாய் நாணயம் அந்த மண்ணுக்கடியில் இருந்ததை கண்கள் காட்டியது.அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனே அந்த நாணயத்தை கையில் எடுத்தாள்.பசி தீற போகிறது என்ற சந்தோஷ பதற்றத்தில் அவள் கைகள் லேசாய் நடுங்கின.சட்டென்று எழுந்தாள். மீண்டும் ஒருமுறை சன்னதியை பார்த்தாள். நன்றி சொல்ல நேரமில்லாமல் பசியார ஓடினாள்.கால் தடுக்கி கீழே விழுந்தாள். கை முட்டியில் ரத்தம். வலியை பொருட்படுத்தவில்லை. மீண்டும் அதே வேகத்துடன் எழுந்து ஓடினாள்.கடைதெருவை அடைந்தாள். ஐந்து ரூபாய்க்கு பசி போகும் அளவுக்கு என்ன கிடைக்கும் என தேடினாள் . "பண்"... . "வேண்டாம் அது உடனே ஜீரணமாகாது"...... "கடலை மிட்டாய்" .... .." வேண்டாம் அது பத்தாது " ..... "பழம்"..... "வேண்டாம் அதுக்கு காசு பத்தாது " .அவளுக்கு பதற்றம் அதிகமாயிற்று. சட்டென்று அங்கு ஒரு தள்ளு வண்டியை பார்தாள். அதில் "கேழ்விரகு கூழ்" என எழுதி இருந்தது. ஆதனிடம் ஓடினாள். அந்த ஐந்து ரூபயை கொடுத்து, "ஒரு சொம்பு கூழ் குடுங்க" என்றாள். " இப்பதாம்மா காய்ச்சினது... இன்னும் சூடாவே இருக்கு ...பரவா இல்லியா? என்ற கடைக்காரனிடம் பரவா இல்லை என்று சொல்ல கூட நேரமில்லாமல் பட்டென்று அந்த கூழ் சொம்பை வாங்கி குடிக்க தொடங்கினாள். தொண்டை சூடு தாங்கல..... பசி வயிரு தாங்கல ..... சூட்டை பொருட்படுத்தாமல் கண்களை இருக்கமாக மூடிக்கொண்டு குடிக்க தொடங்கினாள். "கொடக்"..."கொடக்"..."கொடக்" என்று ஒரு சொட்டு கூட மிச்சமில்லாமல் தொண்டையை புண்ணாக்கி கூழ் உள்ளே இறங்கியது. உடனே சொம்பை போட்டு விட்டு, மீண்டும் அதே வேகத்தொடு ஓடினாள். அதே கோவில் வாசலுக்கு .வாசலில் அமர்ந்து கொண்டாள். நன்றாக அமர்ந்து கொண்டாள். இப்பொது தன்னுள் அமுதம் சுரப்பதை அவள் உணர்ந்துகொண்டாள். சட்டென இவ்வளவு நேரம் இடது கையில் வைத்திருந்த தனது ஆறு மாத குழந்தையை தன் நெஞ்சோடு அனைத்துகொண்டாள். ஆம், இவ்வளவு நேரம் அவள் சிந்திதது, பரிதவித்தது,அழுதது எல்லாமே தன் குழந்தையின் பசியை நினைத்துதான். குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு பசியாற தொடங்கியது. இப்போது அவள் சந்தோஷத்தில் சத்தமாய் அழுதாள்.முதல் முறை சிரித்து கொண்டே அழுதாள்..கண்களில் கங்கை வெள்ளம் பெருகி கரை கடந்து ஓடத்தொடங்கியது..அந்த ஓட்டம் கன்னத்தை கடந்து,தாடையில் ஊசலாடி,சிறு சிறு துளிகளாய் பசியாறிக்கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் விழுந்தது.அந்த துளிகளில் தாய்பாசம் மின்னியது. குழந்தை பாலுண்ணும் சத்தம் அவள் காதுகளில் தேனாய் ஒலித்தது. அந்த சத்தம் "இதுக்குத்தான் உன்ன படச்சேன்" என்று சன்னிதானதிலிருந்து கடவுள் சொன்னது போல் இருந்தது அவளுக்கு. அவளின் சந்தோஷ கண்ணீர் துளிகள் " தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு " என்ற பழமொழியை பொய்யாக்கியது .

உண்மைதான், வள்ளுவன் பெண்ணாய் பிறந்திருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான்.

ஈன்ற பொழுதின் பெறிதுவக்கும் தன்மழலை
பசியாறும் சத்தம்கேட்ட தாய்.
-
முற்றும்