Sunday, October 16, 2011

Sunday, October 2, 2011

பசி

சத்தம் கேட்டு கண்விழித்தால் துளசி. தன்னை சுற்றி ஒரே மக்கள் நடமாட்டம். பேருந்துகளும் இரு சக்கர வாகனங்களும் அவளுக்கு அருகில் பறந்து கொண்டிருந்தன. சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள். கருப்பு நிறம் அவளுக்கு கடவுள் தந்த பரிசு. காய்ந்து சென்னிரமான முடியும், கிழிந்த அழுக்கு ஆடையும், செருப்பிடமிருந்து கிடைத்த விடுதலையும், வறுமை அவளுக்கு தந்த பரிசு. துளசி வாழ்ந்து கெட்டவள்.

பசிப்பதை உணர்ந்து கொண்டாள். அவள் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. வெறும் தண்ணீர் மட்டுமே கடந்த ஆறு வேளையும் அவளது உணவாயிருந்தது. எச்சில் கூட இல்லாமல் நாக்கு வறண்டு போய் இருந்தது. இனி வெறும் தண்ணீர் பசியை போக்காது என் புரிந்துக்கொண்டாள். பசியின் சத்தம் காதடைத்தது. யாரோ சில பேர் குடலை பிடித்து இழுப்பது பொலிருந்தது அந்த பசி. தனது வலது கையை ஊன்றி எழுந்து கொள்ள முயற்சித்தாள். முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எழுந்து கொண்டாள். கையில் பணமில்லை . எதையும் வாங்கி சாப்பிட முடியாத நிலமை.

சிறிது தூரம் நடந்தாள். திடீரென ஒரு திருமண மண்டபம் அவள் கண்ணில் பட்டது. அங்கு சாப்பாடு கிடைக்கும் என்ற சந்தோஷம் அவளது காய்ந்த உதடுகளை சிரிக்க செய்தது. வேகமாய் நடந்தாள். விறு விறுவென மண்டபத்திற்குள் நுழைந்த்தாள். சட்டென்று ஒரு பெரிய கை அவளை வழிமறிதத்து. ஓரு வயதான பெண்ணின் கை அது. "யாருடி நீ! எங்கடி ஒடற.." என கனமாய் கேட்டது அவளது குரல். "சாப்பாடு..." என்று துளசி சொல்லத்துடங்கும் போதே, " சாப்பாடா? அதுக்குள்ள என்னடி உனக்கு அவசரம்.... இன்னும் முகூர்த்தமே முடியல..!.போ..போ..ஒரு ரெண்டு மணி நெரம் கழிச்சு கடைசி பந்திக்கு வா" என்றால். பசி துளசியை திரும்ப போக விடாமல் அங்கேயே நிற்க வைத்தது. போடீன்னா..என்னடி இங்கயே நிக்கிற....!... போடி வெளியே .." என அந்த பெண் துளசியை சற்று பின்னுக்கு தள்ளி நகரசெய்தாள். பசி அவமான வார்த்தைகளை துளசியின் காதுகளில் இருந்து தள்ளி வைத்தது. கடைசி பந்திக்காக இன்னும் இரண்டு மணி நேரம் அவளால் பொருத்துக்கொள்ளவோ,காத்திருக்கவோ முடியவில்லை.ப்சி அவளை வேறு இடம் பார்க்க நகர்த்தியது.

ரோடெங்கும் அலைந்து அலைந்து திரிந்தாள். எங்கும் பசியாறமுடியவில்லை. வெயில் மண்டையை சுட்டது. எதிரில் ஒரு அம்மன் கோவில் தென்பட்டது.கோவிலின் வாசலில் சற்று நேரம் அமர்ந்து கொண்டாள். பசியாற அவளுக்கு வழி தெரியவில்லை.பசியின் வேதனை ஒவ்வொரு நொடியும் அவளை சுக்குனூராக்கியது. துக்கம் தாங்கமுடியவில்லை.உலகமே அவளுக்கு இருட்டாய் தெரிந்தது.தன் நிலயை என்னி உள்ளுக்குள் எறிமலையாய் வெடித்தாள். கோவில் வாசலில் இருந்து எட்டி உள்ளே பார்த்தாள்.கடவுள் சன்னிதானம் தெரிந்தது. ஓ..வென அழதொன்றியது.கடவுளை பார்த்து கத்தினாள். "இதுக்கா என்ன படச்சே ..இதுக்கா என்ன படச்சேசேசே!!!!!!!" . என கதறி அழுதாள். அவள் அழுகையில் வலி இருந்தது ஆனால் ஓசை இல்லை. பசி அவளின் குரலின் ஓசையை பங்கு போட்டு கொண்டது. ஆழுதுகொண்டே இனி என்ன செய்வது என்று யோசித்தாள். " பிச்சை எடுக்கலாமா" என மனம் கேட்டது . " கவுரவமான குடும்பத்தில் பிறந்த பெண் ....வேண்டாம்" என புத்தி சொன்னது. புத்தியின் வார்த்தைகளை நிராகரித்துவிட்டு,மனம் சொன்ன பேச்சை கேட்டாள்.மனதை திடமாக்கி கொண்டு பிச்சை எடுக்க தயாரானாள்.

எழுந்துகொள்ள தனது வலது கையை ஊன்றி அழுத்தினாள். சட்டென்று ஊன்றும் அழுத்தத்தை குறைத்தாள். கையின் அடியில் ஏதோ உறுத்தியது. ஊன்றிய இடத்திலிருந்து கையை எடுத்து விட்டு அந்த இடத்தை சற்று உற்று பார்த்தாள். லேசாக அந்த மண்ணை தடவி பார்த்தாள். இப்போது அவள் கண்களில் பிரகாசம். ஓரு ஐந்து ரூபாய் நாணயம் அந்த மண்ணுக்கடியில் இருந்ததை கண்கள் காட்டியது.அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனே அந்த நாணயத்தை கையில் எடுத்தாள்.பசி தீற போகிறது என்ற சந்தோஷ பதற்றத்தில் அவள் கைகள் லேசாய் நடுங்கின.சட்டென்று எழுந்தாள். மீண்டும் ஒருமுறை சன்னதியை பார்த்தாள். நன்றி சொல்ல நேரமில்லாமல் பசியார ஓடினாள்.கால் தடுக்கி கீழே விழுந்தாள். கை முட்டியில் ரத்தம். வலியை பொருட்படுத்தவில்லை. மீண்டும் அதே வேகத்துடன் எழுந்து ஓடினாள்.கடைதெருவை அடைந்தாள். ஐந்து ரூபாய்க்கு பசி போகும் அளவுக்கு என்ன கிடைக்கும் என தேடினாள் . "பண்"... . "வேண்டாம் அது உடனே ஜீரணமாகாது"...... "கடலை மிட்டாய்" .... .." வேண்டாம் அது பத்தாது " ..... "பழம்"..... "வேண்டாம் அதுக்கு காசு பத்தாது " .அவளுக்கு பதற்றம் அதிகமாயிற்று. சட்டென்று அங்கு ஒரு தள்ளு வண்டியை பார்தாள். அதில் "கேழ்விரகு கூழ்" என எழுதி இருந்தது. ஆதனிடம் ஓடினாள். அந்த ஐந்து ரூபயை கொடுத்து, "ஒரு சொம்பு கூழ் குடுங்க" என்றாள். " இப்பதாம்மா காய்ச்சினது... இன்னும் சூடாவே இருக்கு ...பரவா இல்லியா? என்ற கடைக்காரனிடம் பரவா இல்லை என்று சொல்ல கூட நேரமில்லாமல் பட்டென்று அந்த கூழ் சொம்பை வாங்கி குடிக்க தொடங்கினாள். தொண்டை சூடு தாங்கல..... பசி வயிரு தாங்கல ..... சூட்டை பொருட்படுத்தாமல் கண்களை இருக்கமாக மூடிக்கொண்டு குடிக்க தொடங்கினாள். "கொடக்"..."கொடக்"..."கொடக்" என்று ஒரு சொட்டு கூட மிச்சமில்லாமல் தொண்டையை புண்ணாக்கி கூழ் உள்ளே இறங்கியது. உடனே சொம்பை போட்டு விட்டு, மீண்டும் அதே வேகத்தொடு ஓடினாள். அதே கோவில் வாசலுக்கு .வாசலில் அமர்ந்து கொண்டாள். நன்றாக அமர்ந்து கொண்டாள். இப்பொது தன்னுள் அமுதம் சுரப்பதை அவள் உணர்ந்துகொண்டாள். சட்டென இவ்வளவு நேரம் இடது கையில் வைத்திருந்த தனது ஆறு மாத குழந்தையை தன் நெஞ்சோடு அனைத்துகொண்டாள். ஆம், இவ்வளவு நேரம் அவள் சிந்திதது, பரிதவித்தது,அழுதது எல்லாமே தன் குழந்தையின் பசியை நினைத்துதான். குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு பசியாற தொடங்கியது. இப்போது அவள் சந்தோஷத்தில் சத்தமாய் அழுதாள்.முதல் முறை சிரித்து கொண்டே அழுதாள்..கண்களில் கங்கை வெள்ளம் பெருகி கரை கடந்து ஓடத்தொடங்கியது..அந்த ஓட்டம் கன்னத்தை கடந்து,தாடையில் ஊசலாடி,சிறு சிறு துளிகளாய் பசியாறிக்கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் விழுந்தது.அந்த துளிகளில் தாய்பாசம் மின்னியது. குழந்தை பாலுண்ணும் சத்தம் அவள் காதுகளில் தேனாய் ஒலித்தது. அந்த சத்தம் "இதுக்குத்தான் உன்ன படச்சேன்" என்று சன்னிதானதிலிருந்து கடவுள் சொன்னது போல் இருந்தது அவளுக்கு. அவளின் சந்தோஷ கண்ணீர் துளிகள் " தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு " என்ற பழமொழியை பொய்யாக்கியது .

உண்மைதான், வள்ளுவன் பெண்ணாய் பிறந்திருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான்.

ஈன்ற பொழுதின் பெறிதுவக்கும் தன்மழலை
பசியாறும் சத்தம்கேட்ட தாய்.
-
முற்றும்