Friday, January 14, 2022

தேன்

 தேன் 

--------

அவன் வேகமாக வேலை செய்துகொண்டிருந்தான் . செல் போன்  ஒலித்தது .


சொல்லுபா .

வேலையா  இறுக்கியா கனா ?


இல்லைப்பா சொல்லு . இன்னா விஷயம் ?

ஒன்னும் இல்ல கனா , கொஞ்சம் பணம் வேணும் ,அதுக்கு தான்  போன் பன்னினேன் .


பணமா?  இதே வேலையா போச்சு உனக்கு. எதுக்கு  இப்போ பணம் ? அவன் கோபத்த்தில் எரிந்து விழுந்தான் .

அர்ஜண்டா கொஞ்சம் தேவ படுது .


அதான் மாசா மாசம் அனுபுறேனே , இன்னும் எதுக்கு உனக்கு பணம் ?

போன தடவ பயிர் ஏத்துனது நஷ்டம் . அடிச்ச மழைல பயிரெல்லாம் போயிடுச்சி கனா  . போட்ட காசு எடுக்க முடியல . 


அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற ?

நீ ஒரு  **** ரூபாய்  குடுத்தியன்ன , இந்த போகம் பயிர் ஏத்திடுவேன் . 


****  ரூபாயா ??? அவன் அதிர்ந்து போனான் .

ஆமா கனா , ஏழு  ஏக்கர் பயிர் வெக்கணும்னா , **** ரூபாய்  இருந்தாதான் முடியும்.


போவ் , என்ன விளையாடறியா ? 67 வயசுல நீ இப்போ பயிர் வைக்கலேன்னு யார் அழுதா . என்னால முடியாதுப்பா .என் கிட்ட இல்ல . எங்கயாவது கடன் வாங்கிக்கோ , அப்பறம் நீயே அத தீர்த்துக்கோ .என்ன  ஆள விடு.


டேய் நான் எங்கடா பொய் கடன் வாங்குவேன் . ஏற்கனவே வாங்குன கடனயே கட்ட முடியுமா தவிக்கிறான் .யார் கிட்ட பொய் கேப்பேன் . ஒவ்வொரு நாளையும் இந்த கடன் காரங்க  மத்தியில வாழுறதே பெரிய கஷ்டமா இருக்கு. என்னால முடியலடா . 


அப்போ பயிர் வெக்காத . 


அப்படியெல்லம் விட முடியாது கனா. தயவு செஞ்சு இந்த ஒரு தடவ தாடா . என்னால சமாளிக்க்கவே முடுயலடா. துக்கம் தாளாமல் ஓவென கதறி அழுதார் .


தன் அப்பா அப்படி அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லையா அல்லது வேலை நேரத்தில் ஏற்பட்ட தடங்களை நினைத்தோ அவன் கோவத்தின் உச்சிக்கு போனேன் .


ஏன் இப்படி என்ன உயிரை வாங்குற  . என்ன நிம்மதியா விடு .


அவர் அழுகையை நிறுத்த வில்லை .


 ஒரு விரக்தியில், அவன் சிறுக சிறுக பல வருஷமா சேர்த்த கொண்டு வந்த  **** ரூபாயை ,அவர் கணக்கில் உடனே செலுத்திவிட்டு , "என்ன ஆள விடு , இனிமேல் பணம் பணமுன்னு  என்கிட்டே  வராத. ஏன் கிட்ட இருக்கிற எல்லாத்தையும் கொடுத்துட்டேன் . " என கூறி பதில் எதிர்பாராமல் போனை துண்டித்தான் .


பணம் கொடுத்த அடுத்த சில நாட்கள் அவன் மனம் சஞ்சலித்து கொண்டிருந்தது  . உணர்ச்சிவசப்பட்டு பல நாட்கள் சேர்த்த பணத்தை சில நொடியில் இழந்து விட்டோமே என வேதனையுற்றான் . தந்தை பாசத்தில் தவறு செய்துவிட்டோமோ என தன்னை தானே திட்டிகொண்டான் .


ஒரு நாள் ஏதேச்சையாக அவன் தொலைக்காட்சியில் ஒரு குறும்படம் ஓடிக்கொண்டிருந்தது.


ஒரு இருளன் கயிருடன் காட்டுக்குள் செல்கிறான் . ஒரு பெரிய மலையை பார்க்கிறான் . உச்சி மலையில்  ஒரு பெரிய தேன்கூடு . கயிறு கட்டி பெரும்பாடுபட்டு உச்சியை அடைகிறான். புகை போட்டு தேனீகைளை துரத்துகிறான் . தேனீக்கள் அவனை கொட்டி தீர்த்தன.  புகையினாலயோ அல்லது தேனீக்கள் கொட்டிய வலியினாலயோ , கண்ணில் நீர் வடிய வடிய தேனீகைளை  விரட்டி , அந்த தேன் கூடு முழுவதையும் வெட்டி எடுத்து தான்  வைத்திருந்த குடுவையில் போட்டுக்கொண்டான்  மெல்ல மலை இறங்கி வீடு நோக்கி நடந்தான். வீட்டின் அருகே இருளனின் மகன் விளையாடி கொண்டிருந்தான் . 


அய்! அப்பா! அப்பா! குழந்தை துள்ளி குதித்தது. 


"அப்பா, தேன்  கெடைச்சதாப்பா ?"


ம்ம்ம் ...கெடைச்சது கனா ...வா  வா வா , "ஆ " காமி...


தேன் கூட்டை எடுத்து  ,குழந்தையின் வாயில் தேனை பிழிந்தான் . 




அவன் இழந்த பணம் தேனாய் இனித்தது !


-அருண்குமார்